×

ஜாதகம் எப்போது பார்க்கக் கூடாது?

எப்போது ஜோதிடம் பார்க்கலாம் என்று சென்ற இதழில் சொன்னேன். எப்போது பார்க்கக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘‘நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு பார்க்கலாமா?’’ என்று நண்பர் கேட்டார். நான் சொன்னேன். ‘‘மிக ஆபத்தான நோயில் ஒருவர் இருக்கும் பொழுது அதை தகுந்த மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் செய்து கொள்ளத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஜோதிடரிடம் போய்ப் பார்ப்பதால் பலன் இல்லை. ஒருவேளை அவர் என்ன வைத்தியம் செய்தாலும் இந்த நோய் சரியாகாது என்று சொல்லிவிட்டால், நம்முடைய மனதே, இந்த நோய் சரியாகாது என்றே நினைக்கும். அது நோயின் நிலையை மனரீதியாக வளர்க்குமே தவிர தீர்க்க உதவாது.நீங்கள் ஒரு மருத்துவருக்கு மேல் இரண்டாவது ஆலோசனைக்காக இன்னொரு மருத்துவரை வேண்டுமானாலும் சந்திக்கலாமே தவிர, இரண்டு ஜோதிடர்களைச் சந்தித்து இந்த விஷயம் குறித்து முடிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.’’ இதை நான் என் அனுபவத்திலிருந்து சொல்லி இருக்கிறேன்.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு பெரியவர் வந்தார். மிகவும் வேண்டியவர். அவர் மகனுக்கு தீவிரமான இருதய நோய். ‘‘தீவிர அறுவை சிகிச்சை (பை பாஸ்) அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள். அப்படிச் செய்தாலும் உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? பலனளிக்குமா? ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். நான் சொன்னேன். ‘‘நீங்கள் இப்பொழுது ஜோதிடம் பார்க்காதீர்கள். தேவைப் பட்டால் இன்னொரு டாக்டரிடம் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா என்று கேளுங்கள். அவரும் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரியான நேரங்களில் நீங்கள் மருத்துவரை நம்புங்கள். நடப்பது இறைவன் செயல் என்று அவனை பிரார்த்தனை செய்யுங்கள்’’. அவர் ஜாதகக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இன்னொரு முறை ஒரு நண்பர் இதே கேள்வியை வேறு மாதிரியாகக் கேட்டார். ‘‘ஜோதிஷம் என்பது எதிர்காலத்தை பற்றிய வழிகாட்டல் தானே’’ என்றார். ‘‘ஆமாம் அது ஒரு விளக்கு. (ஜோதி(ஷம்). இருட்டில் தவிக்கும் பொழுது அந்த விளக்கு நாம் எங்கே இருக்கிறோம், எதிரில் என்ன இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும். எதிரிலே இருப்பது மேடா, பள்ளமா, காடா, ஆறா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், பெரும்பாலோர்க்கு ஒரு குழியில் விழுந்த பின்புதான் குழியில் விழுந்து இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.” ஜோதிடர்களிடம் மக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்தும், ஜோதிட பத்திரிகைகளில் கேட்கப்படும் கேள்விகளிலிருந்தும் இந்த நுட்பமான உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

1. பெண்ணை திருமணம் செய்தோம். இரண்டு மாதத்தில் விவாகரத்து ஆகிவிட்டது.
2. ஒரு வியாபாரம் ஆரம்பித்தேன். மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆகிவிட்டேன்.

இப்படித்தான் பெரும்பாலான கேள்விகள் வரும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு அன்பர், நட்பின் அடிப் படையில் ஜாதகம் பார்க்க வந்தார். அவர் பையனுக்கு வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. அடுத்த நாளே வேலைக்கு சேரும்படி உத்தரவு. ஜாதகம் பார்ப்பது, நேரம் பார்த்து ஒரு காரியத்தைச் செய்வது என்பதில் மிகுந்த கவனம் உடைய என்னுடைய நண்பர், அடுத்த நாள் அஷ்டமியாக இருப்பதாகவும், அதைவிட பையனுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதாகவும்கூறி வேலைக்குச் சேர்வதில் ஏதாவது பிரச்னை வருமா? நாளை தள்ளி வைக்க முடியுமா?’ என்று கேட்டார். நான் சொன்னேன்.

‘‘நீங்கள் முருக பக்தர். பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி அருணகிரிநாதர் எழுதிய ‘‘நாள் என் செய்யும், வினை தான் என்செய்யும்’’ என்ற திருப்புகழை ஒன்பது முறை (ஒன்பது கிரகங்களுக்கு) படித்துவிட்டு முருகப் பெருமானிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு உடனடியாக வேலைக்குச் செல்லும்படி சொல்லுங்கள், ஒன்றும் ஆகாது’’ என்றேன். அவர் மகன் வேலைக்குச் சேர்ந்து ஒரே வருடத்தில் ஒரு பிரமோசனும் பெற்றுவிட்டார்.நாம் இதை இப்படிக் கூடப் பார்க்கலாம்.சில ஜாதகங்களில் உங்களுக்கு கிரகங்களே ஜாதகம் பார்த்துச் செயல்படக் கூடிய வாய்ப்பினைத் தரும். இதை அனுபவத்திலும், அவரவர்கள் தனிப்பட்ட சூழ்நிலையிலும்தான் புரிந்து கொள்ள முடியும். அவகாசமே இல்லாது உடனடியாக செயல்பட்டே ஆக வேண்டிய எந்த விஷயத்திலும் ஜாதகம் பார்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

எப்பொழுதும் ஒரு விஷயத்தை என்னுடைய ஜோதிட நண்பர்களிடம் சொல்லுவேன். ஜோதிடம் பார்ப்பது என்பது சர்வரோக நிவாரணி அல்ல. அதற்கும் ஒரு வரையறையும் (limitations) எல்லைக்கோடும் கிரகங்களே வைத்திருக்கின்றன. தங்கள் காரியத்தை நடத்தித் தான் தீர வேண்டும் என்று கிரகங்கள் முடிவெடுத்துவிட்டால், எத்தனை ஆற்றல் வாய்ந்த ஜோதிடராக இருந்தாலும், அவருடைய கண்ணையும் வாக்கையும் கட்டிவிட கிரகங்கள் தவறுவதில்லை.அதேநேரம், பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் கிரகங்கள். பிரபஞ்சத்தின் சக்தி பிரம்மாண்டமானது. அதை இயக்குகின்ற பேராற்றலுக்கு இறைவன் என்று பெயர். அந்த ஆற்றலை சதா சர்வ காலமும் நம்புபவர்களிடம் கிரகங்களோ, ஜாதக பலனோ எடுபடுவதில்லை. ஆனால், அவர்களுக்கும் ஜாதக பலன் உண்டு. அவர்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் இறையாற்றலை மிகத் தீவிரமாகவும், முழு நம்பிக்கையோடும் வணங்கி சரணடைந்தால், நீங்கள் உங்கள் ஜாதகம் குறித்தும், ஜாதகப் பலன் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

The post ஜாதகம் எப்போது பார்க்கக் கூடாது? appeared first on Dinakaran.

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்